திரு திரு திரு பாகம் மூன்று


                         காலை ஐந்து மணி அளவில் குளித்துவிட்டு, குளம்பி பருகிவிட்டு ஸ்ரீ வாரி மெட்டு செல்லும் பேருந்தில் பயணமானோம். இருபது அல்லது முப்பது நிமிட பயணம் தான். தேவஸ்தான இலவச பேருந்து வசதியும் உள்ளது. போகும் வழியிலேயே ஐந்து மணிநேர நடைபயண இடத்தில் சில பேர் இறங்கிக்கொண்டனர். அந்த வழி அதிகமான படிகட்டுகள் இல்லாமல் இருப்பதனால் அந்த வழியை சிலர் தேர்ந்தெடுத்துக்கொள்கின்றனர்.

                         பேருந்தை விட்டு இறங்கியவுடன் அந்த இடம் நன்றாக இருந்தது. மலை வழி என்பதனால் சில்லென காலநிலை இருந்தது. குளிர்ந்த காலநிலை மனதிற்கு இதமளித்தது. சீக்கிரமாக தரிசித்துவிட்டு வேறு இடங்களுக்கு செல்லவேண்டும் என்பதனால் சட சடவென நடக்க ஆரம்பித்தோம். 

                                                                   


கம்பி வேலியினுள்ளே பூங்கா போன்று அமைத்து ஒரு பெரிய சிவன் சிலையை நிருவியுள்ளனர்.



 

முதல் படி ஆரம்பிப்பதற்கு கடவுளை வணங்கிவிட்டு செல்ல பூஜை செய்கின்றனர். மொத்தம் 2400 படிகள். எண்ணிக்கையில் மலைப்பாக இருந்தது. ஆனால் உடன் பேசிக்கொண்டு செல்ல நண்பர்கள் அல்லது குடும்பத்துடன் சென்றால் படிகளை சுலபமாக கடந்துவிடலாம்.





                    நடந்து  செல்பவர்களுக்கு நல்ல வசதியை செய்துள்ளனர். வழி முழுவதும் உட்கார்ந்து களைப்பாறிச் செல்ல திண்ணை அமைத்துள்ளனர். 
ஒலிபெருக்கியில் திருமால் சிறப்புகள் ஒலித்தவாறு இருந்தது. வழி முழுவதும் குடிப்பதற்கு நீர் வசதி செய்துள்ளனர். மழை காலத்திலும் தங்கு தடையின்றி நடப்பதற்கு மேற்கூரை அமைத்துள்ளனர்.




                    செல்லும் வழியில் கற்களை நீளவாக்கில் அடுக்கி வைத்துள்ளனர். ஒரு வேண்டுதலாம். தங்கள் மனதில் நினைத்தது நிறைவேறுவதற்கு. நிறைய வேண்டுதல்களைப் பார்க்க நேர்ந்தது. ஒருவர் படிமுழுவதும் உள்ள குப்பைகளை அகற்றிக்கொண்டே வந்தார். இன்னொருவர் ஒவ்வொரு படியின் மீதும் கற்பூரத்தை ஏற்றிக்கொண்டு வந்தார். மற்றொருவர் முட்டி இட்டவாறு 2400 படிகளையும் கடந்தபடி வந்தார்.

                                                                      

                                         
                வழியில் சிறு சிறு கடைகள் உள்ளன. பொறி, குளிர்பானம் கிடைக்கிறது. 1200 வது படியைக் கடக்கும்போது நடைபாதை பக்தர்களுக்கென சிறப்பு அனுமதிச்சீட்டு வழங்கப்படுகிறது. கை ரேகை மற்றும் புகைப்படம் எடுத்தவுடன் அது கொடுக்கப்படுகிறது. அதில் ஒரு நபருக்கு ஒரு இலவச லட்டுடன் நான்கு லட்டுகள் எழுபது ரூபாய்க்கு வாங்கிக்கொள்ளலாம். 




படியின் ஆரம்பத்தில் உள்ளது போன்று கடைசி படியிலும் பூஜை செய்கின்றனர். 


                மலையின் கீழேயே நமது பொருட்களை வைத்துக்கொள்ள பெட்டகம் உள்ளது. மறுபடியும் படி வழியே நடந்து வருபவர்களுக்கு அது உபயோகமாகும். படியை சுலபமாக நடந்து செல்ல குறைந்த சாமாணங்களைக்கொண்டு செல்வது நன்று. நாங்கள் படியைக்கடந்த உடன் எங்களது பொருட்களை வைத்துக்கொண்டோம். 



                 நடைபாதை வழியே கடந்து வந்தவர்களுக்கென சிறப்பு வரிசை வழி உள்ளது. அதில் நடந்து சென்றோம். வழியில் சூடான பொங்கல் தேவஸ்தான அன்னதான குழு பரிமாறியது. நடந்து வந்த களைப்பிர்க்கு பொங்கல் அமுதமாக தோன்றியது. உள்ளே எங்களை, தரிசனம் செய்வதற்கு முன் இறுதி காக்கும் அறையில் காத்திருந்து செல்வது போன்று அந்த வழியை இணைக்கும்படி அமைத்திருந்தனர். எட்டிற்கும் அதிகமான காக்கும் அறைகள் உள்ளன. நடந்து வந்தவர்களுக்கு சிறப்பு சலுகையாக நடைபாதை பக்தர்களை கடைசி அறையில் காக்க வைக்கின்றனர். அந்த அறையிலேயே லட்டு வாங்குவதற்கான சீட்டும் கொடுக்கப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் உள்ளே காக்க வைக்கின்றனர். பெரிய தொலைகாட்சிப்பெட்டி உள்ளது. 

         எனது சிறுவயதில் வந்தபோது மகாபாரதம் ஒலிபரப்புவார்கள். இப்போது தரிசனம் செய்பவர்களின் எண்ணிக்கை, கோவிலின் சிறப்பு, பாடல்கள், சொற்பொழிவு என ஒளிபரப்புகிறார்கள். நடப்பதற்க்கு திறந்தவுடன் திபு திபுவென கூட்டம் விரைந்தோடியது. மறுபடியும் நின்றபடி சிறிது நேரம் காத்திருந்தோம். ஒரு இடத்தில் முந்நூறு ருபாய் சிறப்பு தரிசனம் செய்பவர்களையும், நடைபாதை பக்தர்களையும் ஒன்றாக கலக்கும்படி செய்துள்ளனர். கூட்டத்தில் நமது துணைகளைக் கெட்டியாக பற்றிக்கொள்வது சாலச்சிறந்தது. கோவிலின் உள்ளே வாயிற்கதவருகே பெருங்கூட்டம் உள்ளே புகுவது போன்று அமைத்துள்ளனர். இதை தவிர்த்தார்கள் என்றால் வயதானவர்களுக்கு நன்று. 

               தரிசனம் செய்வதற்கு சற்று மேடுபடுத்தி பலகையை அமைத்திருந்தனர். ஒரு நிமிட அளவு தரிசனம் செய்யக்கிட்டியது. வெளியில் ஐந்து நிமிடங்கள் உட்கார்ந்துகொண்டு கோபுர கலசத்தைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தோம்.  தங்கத்தால் கூரையை வேய்ந்துள்ளனர். காண சிறப்பாக இருந்தது. எடைக்கு எடை வேண்டுதல் நிறைவேற்றும் துலாபாரம், உண்டியல், பிள்ளையார் என கடந்து வெளியில் அன்னதான உணவருந்த நடக்கத்துவங்கினோம்.

****************************************************(தொடரும்)**************

(அட உங்கள தான். போறது போறீங்க....ஒரு பின்னூட்டம் கொடுத்துட்டு போங்க.....) 

Comments

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஐரா - பாகம் இரண்டு