திரு திரு திரு பாகம் இரண்டு

           நாங்கள் பேசிக்கொண்டு வந்த jargan(அலுவலகத்திர்க்கு உள்ளே பயன்படுத்தப்படும் வார்த்தைகள்) தோரணையைக் கொண்டு அந்தப் பெண் நாங்களும் அவருடைய அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் என மிக நீண்ட நேரம் கவனித்து வந்திருக்கின்றார். அந்த பெண்ணின் ஊர் பலமனேர். ஆந்திரா வட்டாரம். நீண்ட நேரம் பேசிக்கொண்டு வந்தோம். வழியில் ஒரு சிற்றுண்டியில் பேருந்து நின்றது. இயற்கை அழைப்பை முடித்துக்கொண்டு ஒரு தேநீர் கோப்பையுடன் பேருந்து பயணம் தொடர்ந்தது. வழியிலேயே அந்த பெண் இறங்கிவிட்டார். பேரைக் கேட்காமல் விட்டோமே என பின்னர் உரைத்தது. 


                              சித்தூர் வந்தடைந்தோம். பத்ரி தெலுங்கு தாய் மொழிக் கொண்டவர் என்பதால் எனக்கு சிரமமில்லாமல் இருந்தது. பேருந்து நிலையத்திலேயே உணவருந்திவிட்டு திருப்பதி செல்லும் பேருந்தில் அமர்ந்தோம். ஒரு மணி முப்பது நிமிடங்களில் திருப்பதியைச் சென்றடைந்தோம். இரவு பத்து மணி. தரிசனத்தை சீக்கிரம் முடிப்பதற்கு எளிய வழி மலையின் கீழிருந்து நடந்து சென்றால் அவர்களுக்கு சிறப்பு சலுகையில் (எந்த கட்டணமும் இல்லாமல்) மூன்று மணி நேரத்தில் தரிசித்து வரலாம் என பத்ரி கூறினார்.  அவ்வாறு கீழிலிருந்து மலைமேல் செல்ல இரண்டு வழிகள் உள்ளன. ஒரு வழியில் சென்றால் ஐந்து மணி நேரமும் மற்றொரு வழியில் சென்றால் இரண்டு மணி நேரத்திலும் மலையை அடைந்து விடலாம். நாங்கள் தேர்ந்தெடுத்தது இரண்டு மணி நேரத்தில் மலையை அடையும் வழி. நடை பயணம் ஆரம்பிக்கும் இடத்தின் பெயர் "ஸ்ரீ வாரி மெட்டு".

                                      
                                 திருப்பதி பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீ வாரி மெட்டு எவ்வளவு தூரம் என தெரியவில்லை. முதலில் அதைக்  கண்டுபிடித்துக்கொண்டு பிறகு அதற்கேற்றார் போல் வாடகைக்கு அறை எடுத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தோம். அங்கேயே தேவஸ்தான தகவல் மையம் உள்ளது. அவர்களிடம் விசாரித்ததில் சுமார் பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் ஸ்ரீ வாரி மெட்டு இருபதென தெரிந்து கொண்டோம். இந்த பதிலை நாங்கள் அந்த தகவல் மையத்திலிருந்து பெற ஒரு ஏச்சு வாங்கிய பின் தான் பதில் கிடைத்தது. பாவம் காலை முதல் பதில் சொல்லிக்கொண்டிருப்பார் போல.

அடுத்த நாள் சனிக்கிழமை காலையிலேயே சீக்கிரம் நடைபயணத்தை ஆரம்பித்துவிட  வேண்டும் என எண்ணிக்கொண்டோம். வாடகைக்கு பேருந்து நிலையத்திற்கு அருகிலேயே எடுத்துக்கொண்டோம். ஒருவர்க்கு இருநூற்றி ஐம்பது. அந்த அறைக்கு இது அதிகமென தோன்றியது. ஒரு மெத்தை, தொலைக்காட்சி பெட்டி, குளியலறை. குளியலறை சுத்தமாக வைத்திருந்தனர். சொல்ல மறந்து விட்டேன். திடீரென கிளம்பும் அவசரத்தில் ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்து வர மறந்துவிட்டோம். கைபேசியில் சேமித்து வைத்துள்ள கோப்பினை அவர்கள் எடுத்துக் கொள்ளவில்லை. ஆகையால் எங்கு சென்றாலும் தவறாமல் அடையாள அட்டையை எடுத்து செல்லுங்கள். பத்ரி சீக்கிரம் உறங்கிவிட்டார். கொசு கடியில் எனக்கு நீண்ட நேரம் தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு புரண்டு படுத்துப்பார்த்து முடியாமல் கொண்டுவந்திருந்த சால்வையை புழுக்கத்தையும் பொருட்படுத்தாமல் இழுத்து போர்த்திக்கொண்டு தூங்கிப்போனேன்.

************************************************(தொடரும்)****************

              தங்களின் பின்னூட்டதை எதிர்பார்க்கும் திசைதென்றல்.......


Comments

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஐரா - பாகம் இரண்டு