திரு திரு திரு பாகம் நான்கு


                     அன்னதானம் வழங்கும் இடம் லட்டு வாங்கும் இடத்திலிருந்து வலப்பக்கமாக ஒரு நூறு அடி தொலைவில் உள்ளது. உணவு அருந்துவதற்கு மிக சிறப்பாக பெரிய மஹால் போன்று கட்டியுள்ளனர். தைஇலையில் சுட சுட சாதம், சாம்பார்,  பொரியல், கூட்டு, ஒரு இனிப்புடன் ரசம், மோர் என பாத்திகட்டி அடிக்க சிறப்பாக பரிமாறுகின்றனர். இரண்டாம் முறையும் சாதம் பரிமாறுகின்றனர். கூச்சமேபடாமல் வாங்கிக்கொள்ளலாம். 

                   சாப்பிட்டுவிட்டு வெளியில் வந்தால் மிக உயரமான சுவரில் அழகிய ஓவியம் தீட்டியுள்ளனர். நாங்கள் கைபேசியை பெட்டகத்திலிருந்து எடுத்துவராததால் புகைப்படம் எடுக்க முடியவில்லை. அங்கிருந்து நேராக லட்டு வாங்க சென்றோம். வரிசையில் நின்றுகொண்டிருக்கும்போது நம் காதோரமாக கூடுதல் லட்டு வேண்டுமா? கூடுதல் லட்டு வேண்டுமா? என ஒரு சிறுவன் வேகமாக நடந்துகொண்டே கேட்டுக்கொண்டு செல்கிறான். ஒரு சீட்டிற்கு ஐந்து லட்டு வாங்கிக்கொண்டு கைபேசி வாங்கும் இடத்திற்க்கு சென்று கைபேசி எடுத்துக்கொண்டு மலையிலிருந்து கீழிறங்கும் பேருந்தில் சென்று அமர்ந்தோம். 

                நேரம் இருந்த காரணத்தால் காலஹஸ்தி செல்ல தீர்மானித்தோம். கீழ் திருப்பதியில் இருந்து ஒரு மணிநேர பயணம். மிக பழமையான கோவில். சிவலிங்கம் மிக உயரமாக வடிவமைத்துள்ளனர். சொல்ல மறந்துவிட்டேன். கொண்டு செல்லும் பை, கைபேசி, செருப்பிற்கு கொள்ளைக் காசு வாங்குகிறார்கள். சிவலிங்கத்திற்கு முன் சிலந்தியின் வலை பின்னல் நீளமாக தொங்குமாறு ஒரு அமைப்பு உள்ளது. இது வேறெந்த கோவிலிலும் கிடையாது. அதன் வரலாறு இணையத்தில் உள்ளது. செல்லும் வழியில் நிறைய தங்கும் விடுதிகள் உள்ளன. இடைத்தரகர்கள், நாம் கொஞ்சம் ஏமாந்தாலும் அலாக்காக தூக்கிக்கொண்டு அறை எடுக்க வைத்துவிடுவார்கள். பொறுமையாக தரிசனம் செய்துவிட்டு கோவிலின் அருகில் உள்ள சிற்றுண்டியில் உணவருந்திவிட்டு சித்தூர் செல்லும் பேருந்தில் பயணமானோம்.  

                       சித்தூரிலிருந்து  பெங்களூர் வருவதற்கு நிறைய பெங்களூர் பேருந்துகள் உள்ளது. உள்ளூர் விளையாட்டு போட்டியில் கலந்துவிட்டு பெங்களூர் செல்ல ஒரு டஜன் பெண்கள் காத்துக்கொண்டிருந்தனர். சற்று முன் விட்ட இரவுக்காட்சி கூட்டமும் எங்களுடன் ஐக்கியமாகியது. இரண்டு கூட்டமும் பொறுமையாக இரண்டு பேருந்துகளில் சென்றவுடன் நானும் பத்ரியும் இன்னொரு பேருந்தில் பயணமானோம். கால் வலி பின்னியது. ஜன்னலோர குளிர்காற்று தூங்கவிடாமல் அந்த இரவை கழிக்கவைத்தது. வெளியில் பனி, அரிசி வயலில் படர்வது பேருந்தின் வெளிச்சத்தில் ஒருவிதமான பய உணர்வை ஊட்டியது. இருள் பேருந்தின் பின்புறமிருந்து உமிழ்ந்து கொண்டிருந்தது. அரைதூக்கத்தில் பெங்களூரை விடியகாலை ஐந்து மணிக்கு வந்தடைந்தோம். 



***************************************(திருப்பதி பயணம் முடிவுற்றது)********

(தங்களின் பின்னூட்டத்தை எதிர்பார்க்கும் திசைதென்றல்)



Comments

  1. அருமை. நான் என் தாயாருடன் காளஹஸ்தி சென்றபொழுது ஒரு பழைய கட்டிடத்தில் அதிக கட்டணம் கட்டி தங்கும்படி நேர்ந்தது.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ஹம்பி ஓர் அற்புதம் - பகுதி ஆறு

திரு திரு திரு பாகம் ஒன்று

ஜோக் நீர்வீழ்ச்சி - பகுதி 4